Breaking

Saturday, January 1, 2022

கைது நடவடிக்கைகள் கையாளப்படும் விதமும் மக்களை துருவப்படுத்தும் அறிக்கையிடலும்

 

ஒரு நாட்டு மக்களின் மனநிலையை தீர்மானிப்பது ஊடகங்களே. ஊடகப் பரப்பில் வெளியாகும் கருத்துக்களுக்கு அமையவே மக்களின் கருத்துருவாக்கம் அமைகின்றது. அவ்வாறாயின், மக்களின் கருத்துருவாக்கத்தில் தாக்கம் செலுத்தும் ஊடகச் செய்திகள் எவ்வாறு அமையவேண்டும் என்பது இங்கு முக்கிய கேள்வியாகும். பல்லின சமூகங்கள் வாழும் இலங்கை போன்ற ஒரு நாட்டில், அவர்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தாத வண்ணம் செய்திக்கதையை வடிவமைக்கும் பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. கடந்த கால இன முரண்பாடுகள், மத வன்முறைகள் என பல கறைபடிந்த வரலாற்றைக் கொண்ட நாட்டில், இன, மத ரீதியான முரண்பாடுகளை இன்னும் தணிக்க முடியாமல் உள்ளது. ஏற்கனவே ஏற்பட்டுள்ள விரிசலை எவ்வாறு சீர்செய்வதென ஒரு தரப்பினரும், அந்த விரிசலின் இடைவெளியை மேலும் அதிகரிக்க மிகச் சொற்பமான தரப்பினரும் செயற்படும்போது, இவற்றையெல்லாம் சமாளித்து எவ்வாறு மக்கள் மனங்களை ஒன்றிணைக்கப் போகின்றோம் என்பது சவாலான விடயம். அந்த சவால் ஊடகங்களுக்கு உண்டு. அது ஊடகங்களின் மிகப்பெரிய பொறுப்பு என்றும் கூறலாம். ஆனால், ஊடகங்கள் அதனை செவ்வனே செய்கின்றனவா?


துரதிஷ்டவசமாக கடந்த கால சம்பவங்கள் அதனை பொய்யாக்கி வருகின்றன என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. குறிப்பாக, அட்டுலுகமயில் சுகாதார தரப்பின் மீது உமிழ்ந்ததாக வெளியான செய்திகள், .நா. அமர்வு, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி போன்ற பல சம்பங்கள் தமிழ் சிங்கள பத்திரிகைகளில் எந்தளவிற்கு துருவப்படுத்தப்பட்டு பிரசுரிக்கப்பட்டன என ஏற்கனவே ஒரு கட்டுரையில் விரிவாக எழுதியிருந்தோம். அவ்வாறான சில சம்பங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றமை மக்களை இருவேறு நிலைகளில் துருவப்படுத்தும் செயற்பாடாகவே உள்ளது. அதே வேளை இன ரீதியான துருவப்படுத்தல் மட்டுமல்லாது அரச சார்பு அரச எதிர் என்ற நிலையிலும் மக்களைத் துருவப்படுத்துகின்றனர். 


ஊடகங்கள் செய்திகளை வெளிப்படுத்தும் முறையில் மக்களை எவ்வாறு துருவப்படுத்துகின்றன என்பதை விளக்குவதற்கு இங்கே சிலசெய்திகளை எடுத்துள்ளோம்.  கடந்த மே, ஜூன், ஜூலை, ஓகஸ்ட் மாதங்களில் இடம்பெற்ற கைது நடவடிக்கைகள் தொடர்பாக பத்திரிகைச் செய்திகள் எவ்வாறு இருந்தன என்பதைப் பார்ப்போம். 


2021 மே மாதம் 7ஆம் திகதி சிங்கள தேசிய நாளேடு ஒன்று ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.


தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி யாழ்ப்பாணத்தில் பேயாட்டம் ஆடிய இளைஞர்கள்என குறித்த செய்திக்கு தலைப்பிடப்பட்டிருந்தது. ஒருவரை தூக்கிச்செல்லும் புகைப்படத்துடன் இச்செய்தி முன்பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதில் யாழ்ப்பாண நகரிற்கு எவ்வித தேவையும் இன்றி பொழுதுபோக்கிற்காக இளைஞர்கள் வந்ததாகவும், அவர்களை கைதுசெய்ய பொலிஸார் சென்றபோது வீதியில் அமர்ந்து அவர்கள் எதிர்ப்பை தெரிவித்ததாகவும் பின்னர் அவர்களை தூக்கிச்சென்று வாகனத்தில் ஏற்றி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்றதாகவும் கூறப்பட்டுள்ளது.


இந்தச் செய்தியை வாசிப்பவரின் மனநிலையில் யாழ்ப்பாண சமூகம் பற்றி எத்தகைய கருத்துநிலை உருவாகும்?’ ‘பேயாட்டம் ஆடிய இளைஞர்கள்இந்தச் சொல்லாடலும் கவனிக்கத்தக்கது. ஒரு செய்தியில் ஊடகவியலாளரின் கருத்துநிலைகள் தாக்கம் புரியக்கூடாது என்பது ஊடக தர்மம். அதையும் மீறி ஒரு சமூகத்தை எப்போதும் எதிர்நிலையில் வைத்திருக்கும் உளநிலை புலப்படுகிறது. இதே நேரம் இவ்வாறான ஒரு சம்பவம் இதே தினத்தில் காலியில் இடம்பெற்றது. அதை இதே பத்திரிகை இவ்வாறு பிரசுரித்திருந்தது.

 

காலியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்பட்ட 259 பேர் கைதுஇந்தச் செய்தி 22ஆம் பக்கத்தில் ஒரு மூலையில் படங்கள் எதுவும் இன்றி வெளியாகியுள்ளது. 


அதே தினத்தில், அதாவது 2021 மே மாதம் 7ஆம் திகதியன்று தேசிய தமிழ் பத்திரிகையொன்றின் முதற்பக்கத்தில் புறக்கோட்டையில் ஒருவரை பொலிஸார் தூக்கிச்செல்லும் காட்சியை பிரசுரித்துள்ளதோடு, அதற்கு கீழ் அச்சம்பவம் கொழும்பு புறக்கோட்டையில் பொலிஸார் நேற்று விசேட தேடுதல் நடடிவடிக்கையில் ஈடுபட்டனர். முகக்கவசம் அணியாது நடமாடுபவர்கள் இதன்போது கைதுசெய்யப்பட்டனர். முகக்கவசம் அணியாத ஒருவரை பொலிஸார் தூக்கிச்சென்ற போது…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இச்செய்தியை நாம் மேலே குறிப்பிட்ட அதே சிங்கள நாளேடு, அடுத்தநாள் அதாவது 2021 மே 8ஆம் திகதி இரண்டாம் பக்கத்தில் பிரசுரித்துள்ளது. “முகக்கவசம் அணியாதோருக்கு இடம்பெறும் விடயம் இதுதான்என தலைப்பிடப்பட்டிருந்தது. சிங்கள நாளேட்டில் 7ஆம் திகதி முதல் பக்கத்தில் வந்த செய்தி, அதே நாள் யாழில் முகக்கவசம் அணியாத 42 இளைஞர்கள் கைதுஎன்ற தலைப்பில் இரண்டாம் பக்கத்தில் நாம் மேற்கூறிய தமிழ் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதில் பொலிஸாருடன்  செல்ல மறுத்த இளைஞர்களை பொலிஸார் தூக்கிச்சென்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இரண்டு பத்திரிகைகளும் தமது வாசகர்களை திருப்திப்படுத்தும் நோக்கில் செயற்படுவதாகக் கூறிக்கொண்டு துருவப்படுத்தலையே செய்துள்ளன. தமது மக்கள் சார்ந்த பிரதிகூலமான செய்திகளை முதற்பக்கத்தில் பிரசுரிப்பைத் தவிர்த்து எப்போதும் எதிர் நிலையில் வைத்திருக்க விரும்பும் மக்களின் செய்திகளை முன் பக்கத்தில் பிரசுரிப்பது வழக்கமாகியுள்ளது. மேற்கூறிய செய்திகளைப் பொறுத்தவரை சிங்கள மக்களை ஒரு துருவத்திலும் அதன் எதிர் துருவத்தில்  தமிழ் மக்களையும் இரு துருவ நிலைப்பட்டதாக வைத்திருப்பதற்கு தமது செய்திகளின் ஊடாக ஊடகங்கள் செயற்பட்டுள்ளன என்பதை உணரமுடிகிறது. 


இதையே கட்டுரைகள் எழுதும் போதும் காண முடிகிறது. உதாரணமாக 

2021 மே 8ஆம் திகதி நாம் மேற்கூறிய அதே பத்திரிகையில், கைதுடன் தொடர்புடைய கட்டுரை ஒன்றும் வெளியாகியுள்ளது. தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பம்பலபிட்டி மிலாகிரிய பகுதியிலுள்ள விடுதியொன்றில் ஆடம்பரமான முறையில் விருந்துபசாரம் நடத்திய பிரசித்திபெற்ற மொடல்கள் (models) 25 பேர் கைதுசெய்யப்பட்டதை மையமாகக் கொண்டு அந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதன் ஆரம்பமானது இவ்வாறு அமைகின்றது. “ஒரு சம்பவம் நடைபெறும்போது இந்நாட்டு மக்களுக்கு ஒரிரண்டு வாரங்கள் மாத்திரமே அது நினைவிருக்கும் என பிரபாகரன் முன்னர் கூறியிருந்தார். அந்த கதை உண்மை. எந்த அழிவு நடந்தாலும் மக்கள் குறிப்பிட்ட நாட்களின் பின்னர் அதனை மறந்துவிடுவர். அதனை அடிப்படையாகக் கொண்டே அவர் ஆங்காங்கே அடுத்தடுத்து குண்டுத்தாக்குதல் நடத்தினார். அதே போன்று பிரித்தானிய காலனித்துவ காலத்தில், ‘சிங்களவர்கள் முட்டாள்கள் பலகாரம் சாப்பிடத்தான் லாயக்கு’’ என்று பிரித்தானியர்கள் கூறியிருந்தனர். எமது நாட்டு மக்களுக்கு இந்த கதையும் பொருந்துகிறதுஎன ஆரம்பிக்கப்பட்டு பின்னர் பம்பலப்பிட்டி மிலாகிரிய பகுதியில் இடம்பெற்ற கைது தொடர்பாக கூறப்பட்டுள்ளது.  இங்கேயும் கவனிக்கத்தக்கது என்னவென்றால், சிங்கள மக்களின் மனங்களில், எதிர் நிலையில் அந்நியர்களாக கட்டமைக்கப்படுபவர்களில் பிரித்தானியர்களும் தமிழர்களும் அடங்குகின்றனர். 

 

கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் தொடர்பாக நாடளாவிய ரீதியில் பாரிய எதிர்ப்பு வெளிப்பட்டது. இதன்போது பலர் கைதுசெய்யப்பட்டனர். இந்தக் கைது சம்பந்தமான செய்திகளைப் பார்க்கும்போது, 2021 ஜூலை 9ஆம் திகதி  மற்றுமொரு சிங்கள பத்திரிகை ஒன்றில்கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிரான போராட்டத்திற்கு வந்தவர்….” என்று வசனம் முற்றுப்பெறாமல் தலைப்பிடப்பட்டு, வயோதிப சிவில் செயற்பாட்டாளர் ஒருவரை  பொலிஸார் கைதுசெய்து கால்களை பிடித்து இருபக்கமும் இழுத்துச்செல்வதைப் போன்ற புகைப்படத்துடன் அடிகோடிட்டு காட்டப்பட்டுள்ளது. முதற்பக்கத்தில் மற்றுமொரு செய்தியும் இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, “கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய 37 பேர் கைது, தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச்செல்வதற்கு முன்பாக 18 பேர் தப்பிச்சென்றனர்எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய செய்திகள் அதிகாரத்தை எதிர்ப்பதோ கேள்வி கேட்பதோ  என்ற மனநிலைகளை உருவாக்காது மக்களை பயன்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டு பிரசுரமாகியிருந்தன.

 

அதே செய்தியை நாம் ஏற்கனவே குறிப்பிட்ட தமிழ் தேசிய நாளேடு, 2021 ஜூலை 9ஆம் திகதி பிரசுரித்திருந்தது. பிக்கு ஒருவரை கைதுசெய்து பொலிஸார் கைகளையும் கால்களையும் பிடித்து குண்டுக்கட்டாக தூக்கிச்செல்வதைப் போன்ற புகைப்படத்துடன், விபரங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. குறித்த செய்தியின் தலைப்பு கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த 33 பேரையும் விடுவித்தது நீதிமன்றம். பிணையளிக்கப்பட்டோர் தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச் செல்லப்பட்டதால் பதற்றம்என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.  இதை வாசிப்பவர்களுக்கு அதிகாரத்தின் மீதான அதிருப்தி ஏற்படும்.  எனவே ஒரே விடயத்தை முன்வைக்கும்போது அதன் வாசகர்களை துருவப்படுத்தும் நிலையை இங்கு காணமுடியும்.

 

ஒரு சம்பவம் இவ்வாறு வெவ்வேறு நிலைப்பட்டு சிந்ததிக்கக் கூடிய வகையில் ஊடகங்கள் பிரசுரிப்பதானது மக்களை துருவப்படுத்திகிறது. இத்தகைய செய்திகளை வாசிக்கும் மக்கள் மனதில் சார்பான அல்லது எதிரான தோற்றப்பாடுகள் ஏற்படுகின்றன. இவை மக்களின் கருத்து நிலையில் அதிக செல்வாக்கு செலுத்தக்கூடியனவாகும்.

- கலாவர்ஷ்னி கனகரட்ணம்

(“இலங்கை ஊடகங்களின் துருவநிலைஎன்ற தலைப்பிலான வெரிட்டே ஆய்வு நிறுவனத்தின் ஊடக நிகழ்ச்சித் திட்டத்திற்காக, இன்டர்நியுஸ் ஸ்ரீலங்காவின் அனுசரணையில் இந்த கட்டுரை எழுதப்பட்டது.)

No comments:

Post a Comment

Pages