மனித வாழ்க்கையும் இயற்கையும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தது. அதிலும் இயற்கையின் ஒட்டுமொத்த அழகையும் அள்ளிப் பருகினாற்போல காணப்படும் இலங்கையின் மலைப்பாங்கான பிரதேசங்களைக் காணவும், அங்கு வீசும் சுத்தமான காற்றை சுவாசிக்கவும், பாய்ந்தோடும் நீரில் குளிக்கவும் வருடாந்தம் சுமார் 2 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகின்றனர்.
ஆனால், உள்நாட்டில் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் மாத்திரம் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமல், சுத்தமான குடிநீரை பருக வசதியில்லாமல் சுகாதாரமற்ற வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் என எம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
இதுபற்றி ஆராய, இன்டர்நியூஸ் ஏர்த் ஜேர்னலிஸ்ம் நெட்வேர்க்கின், சுற்றுச்சூழல் தொடர்பான நிகழ்ச்சித்திட்டத்தின் பங்களிப்புடன் மலையகத்தின் புஸல்லாவ புரொடொஃப்ட் என்ற பிரதேசத்திற்குச் சென்றோம்.
கடல் மட்டத்திலிருந்து 5550 மீற்றர் உயரத்தில் காணப்படும் புரொடொஃப்ட் பகுதியானது ஆறு பிரிவுகளைக் கொண்டது. அதில் பூச்சிகொட என்பது ஒரு பிரிவாகும்.
இந்த பிரதேசமானது, நுவரெலியா கண்டி பிரதான பாதையிலிருந்து சுமார் 22 கிலோமீற்றருக்கு அப்பால் அமைந்துள்ள ஒரு கஷ்டப் பிரதேசமாகும்.
இங்குள்ள மக்கள் தேயிலைக் கொழுந்து பறிப்பதையும் விவசாயம் செய்வதையும் பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர்.
பலரது கால்களில் பாதணி இல்லை, வீடுகளின் அருகிலும் நடைபாதையிலும் துர்நாற்றத்துடனான நீர் செல்கின்றது.
சிலர் பிள்ளைகளை தூக்கிக்கொண்டு ஆறுகளை நோக்கிச் செல்கின்றனர். அவ்வழியால் செல்லும் சிலர் மூக்கை மூடியவாறு செல்கின்றனர்.
இதனை அவதானித்த நாம், அருகிலுள்ள ஃபுரொடொஃப்ட் தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் பிரதீப்குமாரிடம் வினவினோம்.
| அதிபர் பிரதீப் குமார் - ஃபுரொடொப்ட் த.வி. |
இங்குள்ள பெரும்பாலான மக்கள் தங்கள் மலசலகூட தேவைக்காக, ஆறுகள், வயல்கள் போன்ற பொது இடங்களை பாவிக்கின்றனர்என அவர் கூறினார்.
வீடுகளில் இவ்வாறு பழகிய பிள்ளைகள், பாடசாலைக்கு வருகைதரும்போது அங்கும் ஆறுகளை நாடிச் சென்றுள்ளனர். பின்னர் அதிபர் அப்பிள்ளைகளுக்கு கூறிய அறிவுரையின் பின்னர் அப்பிள்ளைகள் பாடசாலை மலசலகூடங்களை பாவிப்பதாகக் கூறினார்.
அம்மக்களின் மலசலகூட பாவனை தொடர்பான விடயங்களை மேலும் அறிந்துகொள்ள, அதிபரின் துணையுடன் கிராமத்திற்குள் நுழைந்தபோது, உடைந்த கட்டிடங்களுக்கு முன்னால் காணப்படும் ஒரு படிக்கட்டில் ராமசாமி பாலமுரளி என்ற ஒருவர் அமர்ந்திருந்தார்.
தான் நாட்டாமை தொழில் செய்வதாகவும் தமது மலசலகூடம் மழை காரணமாக சுமார் ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர் உடைந்து சரிந்துவிட்டதாகக் குறிப்பிட்டார்.
அப்படியாயின் தற்போது மலசலகூட பாவனைக்கு என்ன செய்கின்றீர்கள் எனக் கேட்டோம். துரத்தே ஒரு மரக்கறி தோட்டத்தை காண்பித்த பாலமுரளி, அதற்கு கீழ் ஒரு ஆறு செல்வதாகவும் அது மறைவாக உள்ளதால் அங்கு சென்று மலசலகூட தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதாகவும் கூறினார்.
அவரது மனைவி மற்றும் இரு பிள்ளைகளும் இவ்வாறே செய்கின்றனர்.
இவரிடம் பேசிவிட்டு அந்த ஆற்றை நோக்கிச் சென்றோம். அங்கு ஐந்து பிள்ளைகளின் தந்தையான கந்தையா கமல்ஹாசன், ஆற்றில் மலம் கழித்த தன் பிள்ளையை கழுவிக்கொண்டிருந்தார்.
தெளிந்த சுத்தமான அந்த நீர் கொத்மலை ஓயா, ரம்பொடை நீர்வீழ்ச்சி என இலங்கையின் பிரதான நீர்நிலைகளுடன் கலக்கின்றன.
ஏன் இவ்வாறு ஆற்று நீரில் மலம் கழிக்கின்றீர்கள் என அவரிடம் கேட்டபோது, தமக்கு மலசலகூடமே் இல்லை என்றும் அதனை அமைத்துக்கொள்வதற்கான நிலம் இல்லையென்றும் கூறினார்.
இவ்வாறு பேசிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், மரக்கறி தோட்டத்தில் கரட் கிழங்குகளை பறித்துக்கொண்டு ஆற்றைத் தாண்டி வந்தார் சாந்தி. இவர் குறிப்பிட்ட விடயம் மிகவும் பாரதூரமானது.
அதாவது, சிலருக்கு மலசலகூடம் இருந்தும் முறையான குழிகள் இல்லை. அவற்றை காண்களில் செல்லவிட்டிருக்கின்றனர்.
“இந்த நீரை தொட்டுத்தான் மரக்கறி செய்கை மேற்கொள்கின்றோம். அதே மரக்கறியை பின்னர் சாப்பிடுகின்றோம். இதனால் நோய்தானே வருகின்றது?” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய சாந்தி, அவ்வாறான இடங்களையும் எமக்குக் காண்பித்தார்.
அதற்கருகில் வசித்த 65 வயதான ஐயன் கணபதி எம்மிடம் இவ்வாறு கூறினார்.
“எமக்கு மலசலகூடம் உள்ளது. மழைக்காலத்தில் நிறைந்து வீட்டுக்குள் வந்துவிடும். நாற்றம் தாங்கமுடியாமல் வீட்டை மூடிவிட்டு நாங்கள் வெளியே ஓடிவிடுவோம். குழி நிறைந்துவிட்டதால் மலசலகூட கழிவை காணுக்குள் திறந்துவிட்டுள்ளோம்“ என இலை குழைகளால் மறைந்து காணப்படும் காணை எம்மிடம் காண்பித்தார்.
அதற்கருகில் கசிவுகளுடன் பல நீர்க்குழாய்களும் காணப்பட்டன. அது குடிநீர் என்பதை கணபதியிடம் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டோம்.
அவ்வாறாயின் அந்த நீரும் கழிவு நீரும் ஒன்றாக கலக்கும் சாத்தியம் உண்டல்லவா என கனபதியிடம் கேட்டோம்.
“என்ன செய்ய அம்மா? இரண்டு நீரும் கலந்தாலும் எமக்கு தெரியாது. அதைத்தான் குடிக்கின்றோம். கன்றாவி வாழ்க்கைதான் வாழ்கின்றோம்“ என்றார் ஆதங்கத்துடன்.
சாதாரணமாக மலசலகூட குழிகள் 3 அடி ஆழம், 8 அடி நீளம், 8 அடி அகலத்திற்கு வெட்டப்பட வேண்டுமென்பதை பொறியியலாளர் வெங்கடேஷ்வரன் சதீஸிடம் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டோம்.
அத்தோடு, அவை கொங்கிறீட்டினால் மூடப்பட வேண்டும். ஆனால், இங்கு பலரது குழிகள் தடிகள், பாக்கு மட்டைகள், வெற்றுப் பைகள் போன்றவற்றால் மூடப்பட்டு காணப்பட்டன.
அந்த குழிகளை நாம் அருகில் சென்று பார்த்தபோது அங்கு புழுக்கள் நிறைந்து, ஈக்கள் மொய்த்து, அருகில் நெருங்க முடியாத தோற்றத்தில் காணப்பட்டன.
மழைக்காலத்தில் இவை நிரம்பி வழிந்து நேரடியாக சுற்றுச்சூழலுக்கு செல்வது, பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் செயற்பாடாகும்.
இங்கு நாம் அவதானித்த விடயங்களில் பலரது மலசலகூட கழிவுகளுக்கு குழிகள் இன்றி, நேரடியாக தரையில் விடப்படுகின்றன. சிலர் நீரோடைகளிலும் ஆறுகளிலும் மலம் கழிக்கின்றனர். சிலரது மலசலகூட குழிகள் உரிய முறையில் மூடப்படாமல் காணப்பட்டன.
இவ்வாறான மலசலகூட பாவனை சுற்றுச்சூழலுக்கு எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகின்றதென சூழலியலாளரான பேராசிரியர் திலக் பண்டாரவிடம் வினவிவோம்.
| பேராசிரியர் திலக் பண்டார - சூழலியலாளர் |
‘திறந்த மலசலகூட பாவனையால் நிலம், நீர், காற்று மாத்திரமன்றி தாவரங்கள் மற்றும் விலங்கினங்களும் பாதிப்படைகின்றன. துர்நாற்றம் காரணமாக வளியின் தன்மையில் மாற்றம் ஏற்படுகின்றது. இதனை மக்கள் சுவாசிக்கும்போது மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.
மலக்கழிவுகள் நிலத்திற்கு நேரடியாக விடப்படும்போது மண்ணின் தன்மை பாதிப்படைகின்றது. மனிதனின் மலம் மண்ணுக்குள் செல்லும்பொது அது உரமாகின்றது என்ற தவறான கருத்து மக்களிடம் உண்டு.
அது உரமாக வேண்டுமாயின் நைட்ரஜன், பொஸ்பரஸ் மற்றும்பொட்டாசியம் ஆகியன அதிகளவில் உள்ளடங்கியிருக்க வேண்டும். அதற்கு பதனாக்கல் செயற்பாடு உண்டு. அதனை முறையாக மேற்கொண்ட பின்னரே உரமாக பயன்படுத்த முடியும்.
அதனை நேரடியாக ஒருபோதும் உரமாக பயன்படுத்த முடியாது. அதனால்தான் நாம் கழிப்பறை பதனாக்கல் நிலையத்தை பயன்படுத்துகின்றோம்.
மலக்கழிவுகள் நீரில் கலப்பதே ஆபத்தானது. அப்படியிருக்கையில், நேரடியாக நீரில் மலம்கழிக்கும்போது அதன் ஆபத்து பலமடங்கு அதிகம். இதனால் ஏற்படும் ஆபத்து பிரதேசத்திற்கு பிரதேசம் மாற்றமடையும்.
மலையகத்தில் நீரானது மலைப்பகுதியிலிருந்து பாய்ந்து செல்கையில் அதற்கு கீழ்ப்பகுதியில் உள்ள மக்கள் பாதிப்படைகின்றனர். இதே யாழ்ப்பாணம், குருநாகல் போன்ற தட்டையான பிரதேசங்களில் நிலக்கீழ் நீர் மாசடையும்.
காலனித்துவ காலத்தில் அமைக்கப்பட்ட இந்த மலசலகூடங்கள் அதற்கு பின்னர் புதுப்பிக்கப்படவில்லை. பல இடங்களில். மழைக்காலத்தில் அவை நிரம்பி வழியும் நிலை ஏற்படுகின்றது. இது சூழலுக்கு அச்சுறுத்தலாகும்.
வெளியிடங்களில் மலக்கழிவுகள் காணப்படும்போது சிறுவர்கள் தொடுவார்கள். இதனால் தோல்நோய்கள் ஏற்படும். அவற்றை நான் அவதானித்தும் உள்ளேன்.
அதுமட்டுமன்றி மலக்கழிவுகளை உண்ண மிருகங்கள் வருகின்றன. அவை ஆங்காங்கே இழுத்து போடும்போது சுற்றுச்சூழல் மாசடைகின்றது. இதனை பாதுகாக்க வேண்டுமாயின் மக்களின் குடியேற்ற முறை மாற்றமடைய வேண்டும். அவர்களுக்கு முறையான கழிப்பறை வசதிகளை செய்துகொடுக்க வேண்டும்‘’ என்றார்.
நாகரீகம் எவ்வளவுதான் வளர்ச்சியடைந்தாலும், தொன்றுதொட்டு வந்த பழக்கவழக்கம், வறுமை, கல்வியில் பின்னடைவு போன்ற பல காரணங்களால் திறந்த மலசலகூட பாவனையானது சஹாரா கீழமை மற்றும் ஆசிய நாடுகளில் இன்றும் காணப்படுகின்றது.
இதனால், ஒருபுறம் சுற்றுச்சூழல்
பாரிய
அச்சுறுத்தலை
எதிர்கொண்டுள்ளதோடு மறுபுறம் மக்கள் சுகாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
பூச்சிகொடயில் வாழும் சுமார் 400 குடும்பங்களில், சுமார் 150 குடும்பங்களுக்கே முறையான மலசலகூடங்கள் உள்ளன. ஏனைய அனைவரும் முறையான மலசலகூடங்கள் இன்றி அல்லது மலசலகூடமே இல்லாமல் வாழ்கின்றனர்.
உலக சனத்தொகையில் 12 சதவீதமானோர் திறந்த வெளியில் மலம் கழிப்பதாக உலக வங்கியின் புள்ளிவிபரம் கூறுகின்றது. மலையகத்தில் புரொடொப்ட் பகுதி மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ பின்தங்கிய கிராமங்களில் திறந்த வெளியில் மலம் கழிப்பதும், உரிய மலசலகூட வசதிகள் இன்மையும் நீடிக்கின்றது.
இங்கு மலக்கழிவுகள் நேரடியாக சுற்றுச்சூழலில் விடப்படும்போது எண்ணற்ற நச்சுக்களும் பக்டீரியாக்களும் சுற்றுச்சூழல் அமைப்பில் உருவாகின்றன.
இம்மக்களுக்கு ஒருபுறம் வறுமை, மறுபுறம் தமக்கான மலசலகூடங்களை அமைப்பதற்கான நிலம் இல்லை. எது எவ்வாறாயினும் இந்த சூழல் பிரச்சினைக்கு காரணம் மக்களா, அரசாங்கமா அல்லது தோட்ட நிர்வாகமா? யாரால் பதில்கூற முடியும்?
- கலாவர்ஷ்னி கனகரட்ணம்
No comments:
Post a Comment